ரெட்டியார்சத்திரம் : காமாட்சிபுரம் நாயக்கர் கண்மாய் பெயரளவு கூட பராமரிப்பு இல்லாத சூழலில் மண் திருட்டு பிரச்னையால் இயற்கை வளத்தை இழந்து வருகிறது. வரன்முறையற்ற மண் திருட்டால் வரத்து மழைநீரை தேக்கி வைக்க முடியாத அவல நிலையும் தொடர்கிறது.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 80க்கு மேற்பட்ட குட்டைகள், கண்மாய், நுாற்றுக்கணக்கான விவசாய கிணறுகள் உள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை தற்போது வருவாய்த்துறை ஆவணங்களில் மட்டுமே பெயரளவில் நீராதாரங்களாக உள்ளன.
ஊராட்சி ஒன்றியம், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த போதும் அதிகாரிகளின் அலட்சியத்தால் வறண்டுள்ளன.
பல கண்மாய்கள் அனுமதியற்ற மண் திருட்டால் இருந்த இடம் தெரியாத அளவிற்கு அழிவின் விளிம்பில் உள்ளன.
காமாட்சிபுரம் ஊராட்சி எல்லைப்பட்டியில் இருந்து கெம்மனம்பட்டி செல்லும் ரோட்டில் நாயக்கர் கண்மாய் உள்ளது. வேலை உறுதி திட்டத்தின் மூலம் இதன் பராமரிப்பு பணிகள் அவ்வப்போது நடைபெற்றதாக கூறப்பட்டாலும், ஏட்டளவில் மட்டுமே பராமரிக்கப்பட்டு வருவதாக இப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.
மண் திருட்டு தாராளமாக நடப்பதால் அடிப்பகுதி துார்ந்து, சொற்ப மழை நீரும் தேங்கி நிற்க முடியாத அளவிற்கு கண்மாய் எப்போதும் வறண்ட சூழலில் காட்சியளிக்கிறது.
சுற்று விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. போதிய நிலத்தடி நீர் ஆதாரமற்ற சூழலில் காய்கனி சாகுபடி பணிகளும் தொடர்ந்து நட்டத்தை ஏற்படுத்துவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பெயரளவில் மட்டுமே பராமரிப்பில் உள்ள இக்கண்மாய் இப்பகுதி சாகுபடி பணிகளுக்கு பலனளிக்காத நிலையில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் இப்பகுதியின் நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்கும் வகையில் மேம்பாட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.-
பராமரிப்பில் அலட்சியம்
முருகப்பெருமாள், விவசாயி, கே.எல்லைப்பட்டி : 5 ஏக்கரில் உள்ள இக்கண்மாய் மூலம் சுற்றுப்புறத்தில் 10 கிலோ மீட்டர் நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கும் வாய்ப்பு உள்ளது.
மழைக்காலங்களில் காட்டு ஓடைகள் வழியே வரும் தண்ணீர் மட்டுமே வரத்து ஆதாரமாகும். இதனை பராமரிப்பதில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
பல்வேறு திட்டங்களில் பராமரிப்பு என்ற பெயரில் பெருமளவில் முறைகேடுகள் தொடர்கின்றன. தண்ணீர் தேங்கும் பகுதி, வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளால் குறுகியுள்ளது. பல இடங்களில் முழுமையாக வழித்தடம் இல்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
சேதமுற்ற நிலையில் --கரை பகுதிகள்
எஸ்.சக்திவேல்,ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர், மார்க்சிஸ்ட் : வெண்டை, கொத்தவரை, பீன்ஸ் போன்ற சாகுபடி நடக்கிறது. இப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக இருந்தபோதும் ஒன்றிய நிர்வாகம், ஆவண அடிப்படையில் மட்டுமே இக்கண்மாயை பராமரிக்கின்றனர். கரை பகுதிகள் முழுமையாக சேதமடைந்த நிலையில் உள்ளது. நீர் தேங்கும் பகுதி, கரை, சுற்றுப்புறங்களில் முள், புதர் செடிகள் அடர்ந்துள்ளன. பெயரளவில் கரைப்பகுதியில் அமைக்கப்பட்ட மெட்டல் ரோட்டில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி, பாதசாரிகள் கூட நடந்து செல்ல முடியவில்லை.
பராமரிப்பற்ற நிலையில் இரு சக்கர வாகனங்களில் கூட கரைப்பகுதியில் பயணிக்க முடியவில்லை. கண்மாயோ ஏட்டுச் சுரக்காய் போன்ற வீணான நிலையில் உள்ளது.
மண் திருட்டு தாராளம்
ராமச்சந்திரன் ,பா.ஜ., விவசாய அணி ஒன்றிய தலைவர், கெம்மனம்பட்டி: மழை நேரங்களில் ரோடு சகதியான நிலையில் விளைபொருட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது. கண்மாயில் இயந்திரங்கள் மூலம் மண் திருட்டு தாராளமாக நடக்கிறது.
வரன்முறையின்றி ஆழமான குழிகள் தோண்டப்பட்ட நிலையில் கண்மாயின் பெரும்பகுதி தொடர்ந்து நீர் தேங்க முடியாத அவல நிலையில் உள்ளது.
கண்மாயின் உள்பகுதி மட்டுமின்றி கரையின் பக்கவாட்டு பகுதியையும் சுரண்டி மண் திருடி உள்ளனர். கரை பலம் இழந்த நிலையில் உள்ளது. மழை காலத்தில், எல்லைப்பட்டி-கெம்மனம்பட்டி இடையே போக்குவரத்து துண்டிக்கும் அபாயம் உள்ளது.