திருவாடானை : பயிர் காப்பீடு செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதால் திருவாடானை தாலுகாவில் 197 எக்டேரில் விவசாய நிலங்கள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டது.
திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரம் எக்டேரில் பயிர் சாகுபடி பணிகள் துவங்கியது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு உரிய காப்பீடு தொகை வழங்க வேளாண் காப்பீட்டு நிறுவனம் சார்பில் காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. நவ.15 கடைசி நாளாக அறிவிக்கபட்டதால் விவசாயிகள் ஆர்வமாக பதிவு செய்ய துவங்கினர்.
ஆதார் அட்டை, கணிப்பொறி சிட்டா, அடங்கல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை தயார் செய்து பதிவு செய்தனர். ஆண்டு தோறும் இந்த தாலுகாவில் விவசாயிகள் ஆர்வமாக பதிவு செய்வது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் ஆர்வமாக இப்பணியில் ஈடுபட்டனர். மொத்தமுள்ள 26 ஆயிரம் ஹெக்டரில் நவ.15 வரை 21 ஆயிரத்து 838 எக்டேர் நிலங்கள் பதிவு செய்யப்பட்டது.
தொடர் மழையால் விவசாயிகள் பயிர்களை பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுபோன்ற நேரங்களில் விவசாயிகள் காப்பீடு செய்வதற்கு நேரம் கிடைக்காது.
இதனால் ஏராளமான விவசாயிகள் பதிவு செய்ய முடியாமல் தவித்தனர். எனவே கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக நவ.21 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதனால் திருவாடானை தாலுகாவில் 197 எக்டேர் நிலங்கள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டது.