பழநி, : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் ஊழியர்கள் கலந்து கொண்டதால் ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோட அன்றாட பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி இயக்குனர்கள் அனைவருக்கும் இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியம் வழங்கி பணிவரைமுறை செய்தல் வேண்டும்.
பொறியியல் பிரிவில் பத்து ஆண்டுகள் பணியினை நிறைவு செய்யவில்லை என பணிநீக்கம் செய்ய உள்ள முயற்சியை கைவிட வேண்டும்.
உதவி இயக்குனர், உதவி பொறியாளர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் நிலை பதவி உயர்வு ஆணைகளை தாமதம் இன்றி வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றக்கோரி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சிறு விடுப்பு போராட்டம் நடைபெற்றது.
மாநில செயலாளர் ராஜசேகரன் தலைமையில் ஒன்றிய அலுவலக பணியாளர்கள் ஊழியர்கள் 650 க்கு மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இன்றும் போராட்டம் தொடர உள்ளதால் ஊராட்சி ஒன்றிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.