ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்குள் செடிகள், புற்கள் வளர்ந்துள்ளதால் ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலமாகியுள்ளது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் தடகள போட்டிகளுக்கான மைதானத்தில் தினமும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மாவட்ட, மாநில அளவில் சாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பலர் பயிற்சிக்கு வருகின்றனர். வாலிபால், கால்பந்து, ஹாக்கி, கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி பெற மாணவர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மைதானம் பராமரிக்கப்படாமல் அதிகளவில் செடிகள், புற்கள் வளர்ந்துள்ளன. சிலர் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர்.இதனால் விளையாட்டு மைதானத்தில் பயிற்சிக்கு வரும் வீரர்கள், மாணவர்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே விளையாட்டு மைதானத்திற்குள்தேவையற்ற இடங்களில் வளர்ந்துள்ள செடி, கொடி, புற்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும், என மக்கள் வலியுறுத்தினர்.