சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகத்தில் பெண்களிடம் செயின் பறிப்பு, டூவீலர் திருட்டுக்களை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்துவதோடு, குற்றவாளிகள் படங்களை வளாகத்தில் வைக்க வேண்டும்.
இம்மருத்துவமனையில் உள், வெளிநோயாளிகளாகஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இது தவிர பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணிகளுடன் அதிகளவில் உறவினர்களும் வருகின்றனர்.
இம்மருத்துவமனை வளாகத்தில் எந்தநேரமும் கூட்டம் அதிகரித்து காணப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி திருடர்கள் இங்கு வரும் பெண்களிடம் நுாதன முறையில் நகை பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரவில் மருத்துவமனைக்குள் வருபவர்கள் இங்கு நிறுத்தியுள்ள டூவீலர்களை திருடி செல்கின்றனர்.
கடந்த வாரம் வெளிநோயாளிகள் பிரிவுக்கு வந்த பெண்ணிடம், மகளிர் குழு கடன் வாங்கி தருவதாக கூறி போனில் பேசிய நபர், அவரை நேரடியாக பார்த்து வங்கி அதிகாரிகளிடம் கையெழுத்து பெற்றுத்தருகிறேன். நகையுடன் வந்தால் நம்ப மாட்டார்கள் எனக்கூறி, அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை வாங்கி கொண்டு தலைமறைவாகினர்.
இங்கு போலீஸ் புறக்காவல் நிலையம் இருந்தாலும், இருவர் மட்டுமே பணியில் இருப்பதால் அவர்கள் முறையாக மருத்துவமனை வளாகத்தை கண்காணிக்க முடிவதில்லை. சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும், போலீசார் நடமாட்டம் இல்லாதது திருடர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்து விடுகிறது.
இது போன்று நோயாளிகளிடம் நகை மற்றும் டூவீலர் திருட்டுக்களில் ஈடுபடும் பழைய குற்றவாளிகளின் படத்தை மருத்துவமனை வளாகத்தில் வைத்தால், பொதுமக்கள் சுதாரித்து கொள்ள வாய்ப்பாக அமையும். சிவகங்கை குற்றப்பிரிவு போலீசார் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.