ரெகுநாதபுரம் : -ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
ரெகுநாதபுரம் சுற்றுவட்டார கிராமங்களான காரான், கும்பரம், தலைத்தோப்பு, சேதுநகர், வாலாந்தரவை, வழுதூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புறநோயாளிகளாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், உரிய நேரத்தில் டாக்டர் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
நோயாளிகள் கூறுகையில், நாய்க் கடி, விஷக்கடி, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட உடல் உபாதைகளுக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தால் சிகிச்சை அளிப்பதற்கு டாக்டர் இல்லை. காலை 9:00 மணிக்கும் வருவதில்லை. இரு நர்சுகள் மட்டுமே உள்ளனர். எனவே, இதற்கான சிகிச்சை மேற்கொள்ள ராமநாதபுரம் செல்லுமாறு அனுப்பி விடுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.