ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை ஆய்வு செய்த திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கரு.மாணிக்கத்திடம் தற்போதுள்ள நீர் விவசாயத்திற்கு போதாது என்பதால் வைகை நீரை கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்தனர்.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்ற சிறப்பு பெற்றது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய். கண்மாய் பாசனத்தில் 12,142 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த கண்மாயின் முழு கொள்ளளவான 6.5 அடியில் தற்போது 2.5 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
தற்போது உள்ள தண்ணீரை பயன்படுத்தி முழுமையாக நெல் விவசாயம் செய்ய முடியாத நிலையில், பாசன விவசாயிகள் உள்ளனர். இந்த நிலையில், பெரிய கண்மாய் பகுதியை திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், கண்மாயில் உள்ள நீர் இருப்பு குறித்து எம்.எல்.ஏ., கேட்டறிந்தார்.
அப்போது விவசாயிகள், கண்மாயில் உள்ள நீர் இருப்பு விவசாயத்திற்கு போதுமானதாக இல்லை. எனவே, பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தனர்.
வட்டார காங்.,தலைவர்கள் சுப்பிரமணியன், மனோகரன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் மோகன், யூனியன் தலைவர் ராதிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.