ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்களால் நேற்று ராமேஸ்வரத்தில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் திக்குமுக்காடி அவதிப்பட்டனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் ராமேஸ்வரம் நகராட்சியில் குறுகிய தெருக்கள், சாலைகள் உள்ளதால் தினமும் அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டத்திற்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதி இல்லை.
ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்ட் முதல் திட்டக்குடி வரை, கோயில் மேல ரதவீதி, வர்த்தகன் தெருக்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நகரில் பிற முக்கிய சாலைகளும் ஸ்தம்பித்தன.
கார் பார்க்கிங் இல்லை
பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல் வரை மற்றும் வர்த்தகன் தெருவில் உள்ள சில லாட்ஜ்கள் தவிர பிற லாட்ஜ்களில் கார் பார்க்கிங் வசதி இல்லாமல், சாலையின் இருபுறத்திலும் வாகனத்தை நிறுத்துகின்றனர். இதுவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.
இதனை தடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ராமேஸ்வரம் பகுதியில் 40 போக்குவரத்து போலீசார் தேவைப்படும் நிலையில் தற்போது 10 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர். இச்சமயத்தில் உரிய நேரத்தில் சாலையை கடந்து செல்ல முடியாமல் வெகு நேரம் மக்கள் காத்திருந்து அவதிப்படுகின்றனர்.
புறவழி சாலை அவசியம்
சரக்கு, சாலை பணிக்கு கற்களை ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள் ராமேஸ்வரம் நகருக்குள் செல்ல டிராபிக் இல்லாத நேரத்தை ஒதுக்க வேண்டும். மேலும் ராமநாதபுரம், தனுஷ்கோடி இடையே நான்கு வழி சாலை, ராமேஸ்வரத்திற்கு புறவழி சாலையை அமைக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் மேலவாசல் வரை ஒருவழி பாதையாக மாற்ற வேண்டும்.
மேற்கண்ட திட்டங்களை விரைவாக நிறைவேற்றினால் ராமேஸ்வரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். இதற்கு கலெக்டர்., எஸ்பி., அதிரடி முடிவு எடுத்து தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.