சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையில் கிடைக்க வேண்டிய மழை பொழிவு 54.83 மி.மீ., குறைவாக பெய்துள்ளது. எனினும் மாவட்டத்தில் உள்ள 5886 கண்மாய்களில்282 கண்மாய்கள் முழுமையாக நிரம்பியுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் தென் மேற்குப்பருவமழை காலத்தில் கிடைக்க வேண்டிய மழையை காட்டிலும் அதிகளவு பெய்துள்ளது. ஆனால் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாக பெய்து ஏமாற்றியுள்ளது. நவம்பரில் 168.40 மி.மீ., மழை பெய்திருக்க வேண்டும். நவ., 23 வரை 113.57 மி.மீ., மட்டுமே மழை பெய்துள்ளது.
கிடைக்க வேண்டிய மழையளவு 54.83 மி.மீ, குறைவாக பெய்துள்ளது. இந்த மாதம் நிறைவடையஇன்னும் 6 நாட்கள் இருந்தாலும் மழை பெய்வதற்கான அறிகுறி காணப்படவில்லை.
மாவட்டத்தில் பொதுப்பணித்துறையில் 1460 கண்மாய்களும்,ஒன்றிய கட்டுப்பாட்டில் 4251 கண்மாய்கள் உள்ளன. இதில் பொதுப்பணித்துறை 216 கண்மாய்களும், ஒன்றிய கண்மாய்களில் 66 கண்மாய்கள் முழுமையாக நிரம்பியுள்ளன.
பொதுப்பணித்துறை கண்மாய்களில் 76 முதல் 99 சதவீதம் வரை 293 கண்மாய்களிலும், 51 முதல் 75 சதவீதம் வரை 652 கண்மாய்களிலும், 26 முதல் 50 சதவீதம் வரை 260 கண்மாய்களிலும், 25 சதவீதத்திற்கும் குறைவாக 9 கண்மாய்களிலும் நீர் இருப்பு உள்ளன.
ஒன்றிய நிர்வாகத்தில் 76 முதல் 99 சதவீதம் வரை 666 கண்மாய்களிலும்,51 முதல் 75 சதவீதம் வரை 1093 கண்மாய்களிலும்,26 முதல் 50 சதவீதம் வரை 1840 கண்மாய்களிலும், 25 சதவீதத்திற்கும் குறைவாக 586 கண்மாய்களிலும் நீர் இருப்பு உள்ளது.