திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் மழை மற்றும் வைகை ஆற்றில் நீர்வரத்து காரணமாக கண்மாய்களுக்கு தண்ணீர் வந்தாலும் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் பெரும்பாலான கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 87 கண்மாய்களும், ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் 122 கண்மாய்களும் உள்ளன.
கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக போதிய நீர்வரத்து இல்லாதது, மழை இல்லாதது போன்ற காரணங்களால் கண்மாய்கள் வறண்டு கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து விட்டன.
642 ஏக்கர் பரப்பளவுள்ள திருப்புவனம் கண்மாயை நம்பி கலியாந்தூர், நயினார்பேட்டை, புதூர், பழையூர்,நெல்முடிகரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 541 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக்கண்மாய் 265 மில்லியன் கனஅடி தண்ணீர் கொள்ளளவு கொண்டது. தற்போது 155 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. கருவேல மரங்கள் அடர்த்தியாக இருப்பதால் முழு கொள்ளளவை எட்ட முடியவில்லை. மேலும் கருவேல மரங்களால் கண்மாய் நீர் ஒரே மாதத்தில் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.
விவசாயிகள் தரப்பில் கூறுகையில்: கண்மாயில் உள்ள கருவேல மரங்களை அகற்ற பொதுப்பணித்துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கண்மாயினுள் தண்ணீர் இல்லாத காலங்களில் காட்டுப்பன்றிகள் ஏராளமாக உருவாகி சுற்றுவட்டார விவசாயத்தை அழித்து வருகிறது. கருவேல மரங்களை முற்றிலும் அகற்றினால் கண்மாயை நம்பியுள்ள 2 ஆயிரத்து 541 ஏக்கரிலும் விவசாயம் நடைபெறும், என்றனர்.
வான்வெளியில் இருந்து பார்க்கும் போது கண்மாயில் தண்ணீர் இருப்பதே தெரியாத அளவிற்கு கருவேல மரங்கள் அடர்ந்து காடு போல காட்சியளிப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற கண்மாய்களை விட திருப்புவனம் கண்மாயில் தான் கருவேல மரங்கள் அதிகளவு வளர்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் திருப்புவனம் கண்மாயில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.