மதுரை : மதுரை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் தொடர்ந்து பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தான் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கான உபகரணங்கள இருக்கா, இல்லையா, இருந்தும் பயன்படுத்த வேண்டாம் என மறுக்கிறார்களா என்று தெரியவில்லை.
மாநகராட்சியில் தினமும் பாதாள, திறந்தவெளி சாக்கடை பராமரிப்பு, குப்பை அகற்றுவது, தெரு நாய் பிடிப்பது உள்ளிட்ட வேலைகளை துாய்மை பணியாளர்கள் மேற்கொள்கிறார்கள். வேலையின் போது நோய் தொற்று ஏற்படாமல் இருக்க இவர்கள் முகக்கவசம், கை, கால் உறை, பாதுகாப்பு உடைஅணிய வேண்டும்.
கழிவுநீர், குப்பை அகற்ற கரண்டி, கம்பி, கூடைகளை பயன்படுத்த வேண்டும். சமீபத்தில் கூட மாநகராட்சி 5 மண்டல துாய்மை பணியாளர்களுக்கும் உபகரணங்களைவழங்கியது. ஆனால் அவர்கள் அதை முறையாக பயன்படுத்துகிறார்களா என மாநகராட்சி சுகாதார பிரிவு கவனிக்க வேண்டும். வார்டுகள் தோறும் உள்ள மேஸ்திரிகள் வழி இதை சுகாதார பிரிவு அதிகாரிகள் அறிய வேண்டும்.
வேலை செய்ய இடையூறின்றிபாதுகாப்பு உடைகள், உறைகள், உபகரணங்கள் இருப்பதும் அவசியம். இது குறித்து துாய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவ்வப்போது அவர்களுக்கு மருத்துவ முகாம்களும் நடத்த வேண்டும்.