உசிலம்பட்டி, : பாரம்பரிய வழிபாட்டுக்கு இடையூறாக மீன்பிடி உரிமம் ஏலமிட முயன்றதால், பொதுப்பணித்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் ஏலத்தை அதிகாரிகள் ஒத்தி வைத்தனர்.
உசிலம்பட்டி தாலுகாவில் திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் பாசனம் பெறும் கண்மாய்களான முதலைக்குளம், அய்யனார்குளம், வின்னகுடி, போடுவார்பட்டி, குறவகுடி, சின்னகண்மாய், பெரியகண்மாய், செம்பட்டி, இருங்குளம், சின்ன, பெரிய இலுப்பைக்குளங்கள், அட்டக்குளம், பூலாங்குளம், பொறுப்பு மேட்டுப்பட்டி, கட்டத்தேவன்பட்டி உள்ளிட்டவற்றின் மீன்பிடி ஏலம் திருமங்கலம் உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடப்பதாக அறிவித்திருந்தனர்.
இதில் முதலைக்குளம் கண்மாய்கரையில் கம்ப காமாட்சியம்மன் கருப்பசாமி கோயில் உள்ளது. இங்கு நேர்த்திகடன் செலுத்துபவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற கண்மாய் நீரில் மீன்குஞ்சுகளை வாங்கி விடுவர். கட்டுப்பாடு காரணமாக இந்த கண்மாயில் மற்ற நாட்களில் யாரும் மீன்களை பிடிப்பதில்லை. மீன்கள் வளர்ந்தபின் குறிப்பிட்ட நாளில் தென்மாவட்டங்களில் உள்ள மீன்சந்தைகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டு மீன்பிடி திருவிழா நடந்து வருகிறது. காலம் காலமாக மீன்பிடி உரிமம் ஏலம் விடப்படாமல் ஊர் மக்களின் பராமரிப்பில் இருந்த கண்மாயின் மீன்பிடி உரிமம் நேற்று ஏலம் விடப்படும் என பொதுப்பணித் துறையினர் அறிவித்திருந்தனர்.
இதனை ஏற்காத கிராமத்தினர் நேற்று காலை குப்பணம்பட்டி பொதுப்பணித் துறை அலுவலகத்தில் வாகனங்களில் திரண்டனர். அலுவலகத்தின் முன்பு முற்றுகையிட்டனர். நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் தேனி நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டது. போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் சாமியாடி எதிர்ப்பை பதிவு செய்தனர். காலை 11:10 மணி வரை நடந்த போராட்டத்திற்குப்பின், கலெக்டர் உத்தரவையடுத்து ஏலம் ஒத்தி வைக்கப்படுவதாக உதவிப் பொறியாளர்கள், போலீசார் தெரிவித்தனர். நிரந்தரமாக ஏலத்திற்கு கொண்டு வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.