திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
திண்டுக்கல் மலையடிவாரத்தில் உள்ள ஓத சுவாமி கோயிலில் சேஷ வாகனத்தில் சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலைக்கோட்டை பத்திரகாளியம்மன் கோயிலில் மலர் அலங்காரத்துடன் பிரத்யங்கிரா தேவிக்கு யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
என்.ஜி.ஓ.காலனி மூனீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடுடன் அன்னதானம் நடந்தது.இதை கோயில் நிர்வாகி ஜெகநாதன் துவக்கி வைத்தார். ஆர்.எம்.காலனி, வ.உ.சி. நந்தவனம்பட்டி, மலைக்கோட்டை நீர்நிலைகளில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். நிலக்கோட்டை அணைப்பட்டி ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு சாத்த, சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. அணைப்பட்டி நீர்நிலையில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட பக்தர்கள் திரளாக வந்திருந்து சிறப்பு வழிபாட்டிற்கு பின் முன்னோர்களுக்கு திதி கொடுத்து மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர்.
பண்ணைக்காடு:- பண்ணைக்காடு மயான காளியம்மன் கோயில் அமாவாசை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அலங்காரத்தில் காட்சியளித்த காளியம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கோபால்பட்டி:- சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில்
ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் சபை நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க மூட்டை மூட்டையாக மிளகாய் வத்தலை கொட்ட உலக நன்மை வேண்டி பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாக பூஜை நடந்தது.
பக்தர்கள் தங்கள் வேண்டுதலை பனை ஓலைகளில் எழுதி யாக குண்டத்தில் போட்டனர்.இதையொட்டி நரசிம்மருக்கு கலசங்களில் பூக்களால் அலங்கரிக்க சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது.
மடத்தில் வளர்க்கப்படும் 50க்கு மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு பக்தர்கள் உணவு வழங்க கோ பூஜையும் நடந்தது. மதுரை ,திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்கள், கேரளா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்களும் கலந்து கொண்டனர்.