சிவகங்கை : சிவகங்கை தெப்பக்குளத்தை சீரமைக்க சிறப்பு நிதி ரூ.5 கோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்து வருவதாக நகராட்சி தலைவர் துரைஆனந்த் தெரிவித்தார்.
சிவகங்கை நகரின் மையப்பகுதியில் கவுரி விநாயகர் கோயில் எதிரே 5 ஏக்கரில் தெப்பக்குளம் உள்ளது. கடந்த சில ஆண்டாக இந்த தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் சரியதொடங்கியது.
குறிப்பாக தெற்கு பகுதி சுற்றுச்சுவர் முற்றிலும் சேதமானது. இதனால் தெப்பக்குளத்தை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தலைவர் துரைஆனந்த் கோரிக்கை வைத்தார். சிறப்பு நிதி மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து தெப்பக்குளத்தை சீரமைக்கு தேவையான நிதி, வரைபடம் குறித்து திட்ட அறிக்கை தயாரிக்க சென்னையில் இருந்து கட்டடக்கலை நிபுணர் முஷின் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாண்டீஸ்வரி, நகரமைப்பு அலுவலர் திலகவதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ரூ. 5 கோடியில் திட்டம்
நகராட்சி தலைவர் (திமு.க.,) துரை ஆனந்த் கூறியதாவது:
சென்னையில் நகராட்சி தலைவர்களுக்கு வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலினிடம் சிவகங்கை தெப்பக்குளம் சீரமைக்க நிதி வழங்குமாறு மனு அளித்தேன். அவர் சிறப்பு நிதியில் செய்யலாம் என தெரிவித்தார்.
அதன்படி ரூ.5 கோடியில் சுற்றுச்சுவர் முழுவதும் கட்டி, நடைபாதை தளம், தெப்பக்குளம் நடுவில் ரவுண்டானா அமைத்து அலங்கார மின் விளக்கு பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.