காட்டுமன்னார்கோவில் -காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், கோர்ட் உத்தரவிட்டும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால், அப்பகுதி மக்கள் மழைக்காலங்களில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அரசு அதிரடியாக அகற்றி வருகிறது.
கடலுார் மாவட்டத்தில் கடலுார், விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி, திட்டக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
குறிப்பாக, சிதம்பரத்தில் அடுக்குமாடி கட்டடங்களை கூட இடித்து அகற்றிவிட்டு அந்த இடம் மீண்டும் குளமாக மாற்றப்பட்டது. சிதம்பரம் நகரத்தில் மட்டும் ஆக்கிரமிப்பில் இருந்த 6க்கும் மேற்பட்ட குளங்கள் மீட்கப்பட்டன. அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கைகள், நீர்நிலைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பாராட்டை பெற்றது.
அதேசமயம், ஒவ்வொரு ஆண்டும் வெள்ள பாதிப்புகளை அதிகம் சந்திக்கும் காவிரியின் கடைமடையான காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை.
மாவட்டத்தின் கடைகோடி பகுதியான காட்டுமன்னார்கோவில் பகுதி தான் விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கி வருகிறது. விவசாயம் மட்டுமே இங்கு பிரதான தொழிலாக இருப்பதால் வாய்க்கால், ஏரி, குளங்கள் அதிகம் உள்ளது. அவை பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் இருப்பதால், மழைக்காலங்களில் தண்ணீர் வடிய வழியில்லாமல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட நகரப் பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. வடிகால் வாய்க்கால்கள் மற்றும் பாசன வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில், நகரில் பல இடங்களில் குளங்களையும் ஆக்கிரமிப்பாளர்கள் விட்டு வைக்கவில்லை. சில இடங்களில் குளம் இருந்ததற்கான தடயமே இல்லை எனவும் கூறப்படுகிறது.
ஐகோர்ட் உத்தரவிட்டும், அந்த உத்தரவை வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை மற்றும் காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் என யாருமே அக்கறை காட்டாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, கடலுார் மாவட்டம் நிர்வாகம் உடனடியாக காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதே நிலை தொடரும் பட்சத்தில், நீதிமன்றத்தில் முறையிடவும், சமூக அமைப்புகள் தயாராகி வருகின்றன.