9 மாதத்துக்கு பின் நாளை ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், அ.தி.மு.க.,வை சேர்ந்த ஜெகநாதன் ஒன்றிய குழு தலைவராக உள்ளார். அவர் மீது, தி.மு.க., கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதையடுத்து, 9 மாதங்களாக, கூட்டம் நடக்காததோடு, பல்வேறு திட்டப்பணிகள் முடங்கின. கடந்த, 3ல் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை, அரசு ரத்து செய்தது.
இதனால் தலைவர் ஜெகநாதன், நாளை கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
இதுகுறித்து கவுன்சிலர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தி.மு.க., அணியில், 10 கவுன்சிலர் உள்ள நிலையில், அ.தி.மு.க.,வில் தலைவர் உள்பட, 3 கவுன்சிலர் மட்டும் உள்ளதால், கூட்டத்தில் கடும் விவாதம் நடக்க வாய்ப்புள்ளது.
வரதட்சணை புகார் 4 பேர் மீது வழக்கு
ஆத்துார்:கெங்கவல்லி அருகே கூடமலை, ஒத்தாலக்காட்டை சேர்ந்தவர் பழனிசாமி, 33. தம்மம்பட்டி, ஜங்கமசமுத்திரத்தை சேர்ந்தவர் கலையரசி, 29. இவர்களுக்கு, 4 ஆண்டுக்கு முன் திருமணமானது. அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறால் கலையரசி, பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். கடந்த ஜூலை, 9ல், கணவர் வீட்டுக்கு கலையரசி சென்றபோது, வரதட்சணை கேட்டு தாக்கியுள்ளனர்.
பழனிசாமிக்கு வேறு திருமணம் செய்ய, அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதையறிந்த கலையரசி மனமுடைந்து, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை, பெற்றோர் மீட்டு, ஆத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர் புகார்படி, ஆத்துார் மகளிர் போலீசார், பழனிசாமி, 33, அவரது தந்தை எட்டியண்ணன், 65, தாய் கவுரி, 57, உறவினர் முத்து, 56, ஆகியோர், வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.