பெத்தநாயக்கன்பாளையம்: கைக்கான்வளவு ஓடையில் பாசன விவசாயிகள், வருண பகவானுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.
பெத்தநாயக்கன்பாளையம், கருமந்துறையில் உள்ள கைக்கான்வளவு நீரோடையில், கடந்த, 21ல், தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், கரியகோவில், வசிஷ்ட நதி பாசன விவசாயிகள், விவசாயிகள் சங்கத்தினர், அ.தி.மு.க., சார்பில், நேற்று வருண பகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, ஏற்காடு சித்ரா, ஒன்றிய குழு தலைவர்களான, பெத்தநாயக்கன்பாளையம் சின்னதம்பி, தலைவாசல் ராமசாமி மட்டுமின்றி, பாசன விவசாயிகள் உள்பட பலர், ஓடையில் பூக்கள், தானியங்கள் துாவி வழிபட்டனர்.
இதுகுறித்து பாசன விவசாயிகள் கூறியதாவது: கரியகோவில் அணைக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்க, இத்திட்டத்தை செயல்படுத்தும்படி கோரிக்கை விடுத்தபோது, முன்னாள் முதல்வர் பழனிசாமி, 7.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணி தொடங்க உத்தரவிட்டார். தற்போது தண்ணீர் கரியகோவில் அணைக்கு செல்வதால், கூடுதல் தண்ணீர் தொடர்ந்து கிடைக்க, வருண பூஜை செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.