நாளை மாநகராட்சி இயல்பு கூட்டம்
சேலம்: சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில், இயல்பு கூட்டம் நாளை காலை, 11:00 மணிக்கு மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடக்க உள்ளது. இத்தகவலை, மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
தி.மு.க., கூட்டம் ஆத்துாருக்கு மாற்றம்
ஆத்துார்: சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம், வரும், 25 மாலை, 4:00 மணிக்கு, வாழப்பாடியில் உள்ள வாழப்பாடியார் திருமண மண்டபத்தில் நடக்கவிருந்தது. சில தவிர்க்க முடியாத காரணத்தால், அந்த கூட்டம், ஆத்துார், அம்மம்பாளையத்தில் உள்ள கொங்கு திருமண மண்டபத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளது. கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க, மாவட்ட செயலர் சிவலிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களிடம் இன்று மனு வாங்கும் எம்.பி.,
சேலம்: தி.மு.க.,வின், சேலம் எம்.பி., பார்த்திபன் அறிக்கை: ஓமலுார் கிழக்கு ஒன்றியத்தில், நவ., 24(இன்று) காலை, 8:00 மணி முதல் மக்களிடம் மனுக்கள் பெறப்படுகின்றன. புளியம்பட்டி, கோட்டமேட்டுப்பட்டி, எட்டிகுட்டப்பட்டி, சங்கீதப்பட்டி, கொல்லப்பட்டி, மூங்கில்பாடி, கோட்டகவுண்டம்பட்டி, செல்லப்பிள்ளைகுட்டை, கோட்டை மாரியம்மன் கோவில், பச்சினம்பட்டி, திண்டமங்கலம் ஆகிய ஊராட்சிகளில், அந்தந்த ஊராட்சி அலுவலகம் முன்பும், ஓமலுார் டவுன் பஞ்சாயத்திலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன், மனுக்களை பெறுகிறேன். மக்கள், குறைகளை மனுவாக அளித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
நாளை ஆத்துாரில் மின்குறைதீர் கூட்டம்
ஆத்துார்: ஆத்துார் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அர்ச்சுணன் அறிக்கை: ஆத்துார் கோட்ட இயக்கம், பராமரிப்பு, செயற்பொறியாளர் அலுவலகத்தில், நவ., 25(நாளை) காலை, 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்க உள்ளது. அதில் சேலம் மேற்பார்வை பொறியாளர், குறைகளை கேட்கிறார். ஆத்துார் கோட்ட நுகர்வோர், மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
தேசிய தர உறுதி சான்றிதழ் அசாம் மருத்துவர் ஆய்வு
சேலம்: சேலம், குமாரசாமிப்பட்டியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேசிய தர உறுதி சான்றிதழ் வழங்குவதற்கான ஆய்வு நேற்று நடந்தது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சுகாதார நிலையத்தில் புறநோயாளி சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், அவசர சிகிச்சை, தடுப்பூசி செலுத்தல் உள்பட, 12 பிரிவுகள் செயல்படுகின்றன.
இதை, மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர்கள் அருண்குமார் பரூவா(அசாம்), அர்ஜுன் சாகா(திரிபுரா) ஆய்வு செய்தனர். அப்போது வழங்கப்படும் மதிப்பெண்படி, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மத்திய அரசின் தர விருது வழங்கப்படும். இந்த ஆய்வு இன்றும் நடக்கிறது' என்றனர்.
வீடு, மனை ஒதுக்க டிச., 2ல் குலுக்கல்
சேலம்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின், சேலம், நாமக்கல் மாவட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன் அறிக்கை: சேலம் வீட்டு வசதி பிரிவில் சேலம், நாமக்கல் மாவட்ட திட்டங்களில், சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள வீடுகள், மனைகள்; இடைப்பாடி திட்டப்பகுதி, 3ல் மேம்படுத்தப்பட்ட, 704 மனைகள், குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்ய தகவல் வெளியிடப்பட்டு, செப்., 5 முதல் அக்., 7 வரை, விண்ணப்பம் பெறப்பட்டன.
ஏற்காடு அடிவாரம், அன்னபூரணி திருமண மஹாலில், டிச., 2 காலை, 11:00 மணிக்கு விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடக்க உள்ளது. மனைகள், வீடுகள் வேண்டி விண்ணப்பித்த மனுதாரர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
கருமந்துறையில் அடிப்படை வசதி தேவை
சேலம்: நாடாளும் மக்கள் கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா, மாநில பொதுக்குழு கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. கட்சி நிறுவன தலைவர் செல்வராசு தலைமை வகித்தார். அதில் ஆத்துாரை தனி மாவட்டமாக அறிவித்தல்; பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பித்த, 3 மாதங்களில் ஜாதிச்சான்றிதழ் வழங்குதல்; ஏற்காடு, கருமந்துறை மக்களுக்கு மருத்துவம், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
20 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கெங்கவல்லி: கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் பிரியா தலைமை வகித்தார். அதில் குடிநீர் குழாய்
சீரமைப்பு உள்பட, 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் விஜேந்திரன், பி.டி.ஓ.,க்கள் குணசேகரன், தாமரைச்செல்வி
உள்பட பலர் பங்கேற்றனர்.
'ஜல் ஜீவன் மிஷன்' நீர்வள அதிகாரி ஆய்வு
நங்கவள்ளி: நங்கவள்ளி ஒன்றியத்தில் மத்திய அரசின், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தில், 366 கிராமங்களில், 22 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், 28 ஆயிரத்து, 787 பயனாளிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க, குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி ஆவடத்துார், சூரப்பள்ளி கிராமங்களில், 80 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. கோனுாரில் விரைவில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நிர்மல் சித்தோரா, கிருஷ்ண கிஷோர் ஆகியோர், ஆவடத்துார், சூரப்பள்ளி, கோனுாரில் நேற்று கள ஆய்வு செய்தனர். அப்போது நங்கவள்ளி பி.டி.ஓ.,கள் வாசுதேவ பிரபு, ஜெகதீஸ்வரர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.