குளித்தலை அருகே இரு பைக்குகள் திருட்டு
குளித்தலை: குளித்தலையை அடுத்த, வைகநல்லுார் பஞ்., புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிமுத்து, 56. விவசாய கூலி தொழிலாளி. இவர், தனது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை, கடந்த 18ம் தேதி இரவு 7:45 மணியளவில் ஐந்நுாற்றுமங்கலம் மாரியம்மன் கோவில் அருகே நிறுத்திவிட்டு, ஐயப்பன் பக்தர்கள் பஜனை நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. இது குறித்து மணிமுத்து கொடுத்த புகாரின்படி லாலாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
இதேபோல் வயலுார் கிராமத்தை சேர்ந்த, மக்கள் நல பணியாளர் கணேசன், 55. இவர், 'பேஷன் புரோ' பைக்கை கடந்த 10ம் தேதி காலை 8:00 மணிளவில் தனது சகோதரரின் கரும்பு தோட்டத்தின் முன், நிறுத்திவிட்டு, தோட்டத்துக்குள் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இது குறித்து கணேசன் கொடுத்த புகாரின்படி லாலாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில பெண் மீட்பு
குளித்தலை: தோகைமலை அருகே நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலப் பெண்ணை சாந்திவன காப்பகத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
குளித்தலை -- மணப்பாறை நெடுஞ்சாலையில் தேசியமங்கலத்துக்கும் கழுகூருக்கும் இடையே 35 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட, வடமாநிலப் பெண் ஒருவர் சாலையில் சுற்றிதிரிந்தார்.
அவர் சாலையில் திடீரென போக்குவரத்துக்கு இடையூறாக குறுக்கே சென்று வந்தார். இந்நிலையில் தகவலறிந்த சாந்திவனம் மனநல காப்பகத்தினர், அந்த பெண்ணிடம் உரையாடினர். இதில் அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து, தோகைமலை போலீசார் உதவியுடன் சாந்திவனம் இயக்குனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், மருத்துவ குழுவினர், அந்த பெண்ணை மீட்டு, திருச்சியில் உள்ள தனியார் மன நல மருத்துவமனையில் சேர்த்தனர்.
மின் கம்பத்தில் பைக் மோதி வாலிபர் பலி
கரூர்: கரூர் அருகே, மின் கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
கரூர், மண்மங்கலம் அருகே உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சியை சேர்ந்தவர் தினேஷ்குமார், 28. இவர், நேற்று முன்தினம், மண்மங்கலம் பகுதியிலிருந்து என்.புதுார் சாலையில் உள்ள சிவாயம்பாளையத்தில், பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது, நிலை தடுமாறி, சாலையோரம் இருந்த மின் கம்பம் மீது மோதினார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த, தினேஷ்குமாரை, அங்கிருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, தினேஷ்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், தினேஷ்குமார், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அருகே சங்கரன்மலைப்பட்டி கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது.
முனையனுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சங்கரன்மலைப்பட்டி கிராமத்தில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன் படி புதிய ரேஷன் கடை ஏற்படுத்தப்பட்டு திறப்பு விழா நடந்தது. கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்து, ரேஷன் கடையை திறந்துவைத்தார்.
இதன் மூலம் எந்தவித சிரமமுமின்றி ரேஷன் பொருட்களை பெற முடியும் என, கிராம மக்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி, குளித்தலை கூட்டுறவு துணைப்பதிவாளர் ஆறுமுகம், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ரவிராஜா, கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.