குளித்தலை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஈமச்சடங்கிற்கு அரசு சார்பில் 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், குளித்தலை நகராட்சி பகுதியில் இந்த நிதி உதவி தொகை வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், பலமுறை மனுகொடுத்தும் நிதி உதவி வழங்காமல் நகராட்சி நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.
பட்டியல் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்களுக்கு ஈமச்சடங்கு நிதி உதவித்தொகையை உடனுக்குடன் வழங்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பா.ஜ., குளித்தலை நகர தலைவர் கணேசன் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் அனைத்து பஞ்., மற்றும் டவுன் பஞ்., பகுதிகளில் வாழும் பட்டியல் பிரிவை சேர்ந்த பொதுமக்களுக்கு ஈமச்சடங்கு நிதி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. வேறு மாவட்டத்தில் விபத்து மற்றும் இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கு, இந்த பகுதியில் குடியிருந்து வருவதற்கான ஆதாரங்களை கொடுத்தும் ஈமச்சடங்கு நிதி பெற்று வருகின்றனர்.
ஆனால் குளித்தலை நகராட்சி பகுதியில் இயற்கை மரணமடைந்தவர்களுக்கு நகராட்சி சார்பில் வழங்கப்படும் நிதி உதவி, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் உள்ளது. எனவே, இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பித்த அனைவருக்கும் இந்த மாதத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால், மாநில, மாவட்ட பா.ஜ., அனுமதியுடன் குளித்தலை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.இது குறித்து குளித்தலை நகராட்சி (பொறுப்பு) கமிஷனர் மனோகரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
நான் இங்கு பணிக்கு வந்து இரண்டு வாரங்கள்தான் ஆகிறது. ஈமச்சடங்கு நிதி உதவி தொடர்பாக இதுவரை எந்தவிதமான தகவலும், புகாரும் வரவில்லை. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.