குளித்தலை: குளித்தலையை அடுத்த மருதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.,) சிறப்பு முகாமில் மாணவியர் மரக் கிளைகள் நட்டு வைத்தனர்.
மருதுார் டவுன் பஞ்., பகுதியில் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவியர் பங்கேற்றுள்ள 7 நாள் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. 4வது நாளான நேற்று, என்.எஸ்.எஸ்., அலுவலர் பொற்செல்வி, மருதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சரவணன், யோகா பயிற்சியாளர் செந்தில் முருகன், மாணவ மாணவியர் இணைந்து மரக்கிளைகளை சேகரித்து, தொடக்கப்பள்ளி வளாகம், மருதுார் சாலையோரங்களில் நட்டு பராமரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது யோகா பயிற்சியாளர் செந்தில் முருகன் கூறுகையில், 'ஆறடிக்கு மேல் உயரம் உள்ள மரக்கிளைகளை நட்டு வைத்து ஒரு சில நாட்கள் நீர் ஊற்றினாலே மரக்கன்றுகள் நன்றாக வளர்ந்து விடும். மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதை விட இது எளிதானது' என்றார்.
சங்கிபூசாரியூர் கரூர் மாவட்டம், தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., முகாம் சங்கிபூசாரியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்தது. அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
மாணவர்கள் பள்ளி வளாகம், கோவில் வளாகம் துாய்மை செய்தல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். முன்னதாக, முகாமில் ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து தரகம்பட்டி 'ஸ்வீட் டிரஸ்ட்' செல்வம் பேசினார். நாளை வரை நடக்கும் இம்முகாமில், மாணவர்கள், பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடத்துதல், கண்தானம், உடல்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் கன்னிச்சாமி, என்.எஸ்.எஸ்., மக்கள் தொடர்பு அலுவலர் உமா, அலுவலர் உட்பட பலர் பங்கேற்றனர்.