கோவை: வருமான வரித்துறையில் ஒவ்வொரு அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனங்களும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்; அதற்கு நாளை இறுதிநாள் என்று வருமானவரித்துறை தலைமை கமிஷனர் ரத்தினசாமி கூறினார்.
வருமான வரிசட்ட திட்டங்களை விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நேற்று நடந்தது. கோவை மண்டல முதன்மை வருமானவரி கமிஷனர் பூபால்ரெட்டி பேசுகையில்,'' அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு பெற பலரும் நிதி வழங்குகின்றனர்.
நிதியை பெறுபவர்கள் வருமான வரியில் இருந்து விலக்கு பெறும் நடைமுறைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியம்,'' என்றார். தமிழகம் மற்றும் புதுவை வருமான வரி தலைமை கமிஷனர் (டி.டி.எஸ்.) ரத்தினசாமி பேசியதாவது:
ஒரு நாட்டின் அரசு இயந்திரத்தின் முக்கிய ஆதாரம் நிதி. அந்த நிதி வரி வாயிலாக அதிகம் பெறப்படுகிறது. மத்தியஅரசு அதை பெற்று குறிப்பிட்ட சதவீதத்தை மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கிறது. அந்த நிதியில் இருந்து மாநில அரசு மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்கிறது. மக்களிடமிருந்து பெறும் வரி மக்களுக்கே நலத்திட்டங்கள் வாயிலாக சென்றடைகிறது.
மக்கள் வரி செலுத்த பல நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளோம்.அதை மக்கள் பின்பற்ற வேண்டும். வரி செலுத்த தகுதியுள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் வரி செலுத்த வேண்டும். ஒவ்வொரு அறக்கட்டளையும், தொண்டு நிறுவனமும் கட்டாயம் வருமானவரித்துறையில் பதிவு செய்திருப்பது அவசியம்.
அப்படி பதிவு செய்வதற்கு நாளை (நவ.,25ம் தேதி) கடைசி.பதிவு செய்திருக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும், அறக்கட்டளைக்கு மட்டுமே வருமானவரிவிலக்கு கிடைக்கும். பதிவு செய்யாதிருந்தால் எவ்வளவு வருமானவரி செலுத்த வேண்டுமோ அதற்கான அபராதத்தொகையுடன் சேர்த்து வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.