இது தொடர்பாக, கரூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மணிமுத்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு, கரூர் அரசு அருங்காட்சியகத்தில் தொல்லியல் துறை, அருங்காட்சியகங்கள் துறை இணைந்து 'படம் பார்த்து கதை சொல்' என்ற வரலாறு சார்ந்த போட்டியை வரும் 26 முதல் 30ம் தேதி வரை நடத்த உள்ளன.
இதில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பாரம்பரிய கோவில்கள், சிலைகள், இடங்கள், மலைகள் போன்றவை தொடர்பான புகைப்பட கேள்விகளுக்கு விடை எழுதும் போட்டி நடத்தப்பட உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் கரூர் மாவட்ட பொதுமக்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். ஒரு நாளுக்கு ஒரு புகைப்படம், அதற்கான கேள்வி வீதம் ஐந்து நாட்களுக்கு ஐந்து புகைப்பட கேள்விகள் கேட்கப்படும். அதற்கான பதிலை அருங்காட்சியகத்தில் வழங்கப்படும் விடைத்தாளில் எழுதி, அங்குள்ள பெட்டியில் இட வேண்டும்.
போட்டி முடிந்த ஆறாவது நாள், போட்டியில் பங்கேற்றவர்கள் முன்னிலையில் சரியான பதில் அளித்த ஒவ்வொரு புகைப்பட போட்டிக்கான வெற்றியாளருக்கு பரிசு வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட சரியான பதில்கள் இருந்தால் குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.