குளித்தலை: குளித்தலையை அடுத்த, அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச திருமண திட்டத்தில் 2 ஜோடி மட்டுமே பயனாளியாக தேர்வு செய்யப்பட உள்ளதால், ஏழை மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
காத்திருக்கும் ஏமாற்றம்
இந்த பதாகையை பார்த்து, தினமும் 10க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் திருமணம் திட்டத்துக்கு விண்ணப்பிக்க, கோவில் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால், கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ள பதாகையில், திருமண நாள் எப்போது, எத்தனை ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்படும்? என்பன போன்ற தகவல்கள் குறிப்பிடப்படவில்லை.பதாகையை பார்க்கும் ஏழை மக்களுக்கு 2 ஜோடிக்கு மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படும் என்ற தகவல் தெரியாது. விண்ணப்பங்களை வாங்கி செல்வோரில் 2 ஜோடி போக, எஞ்சியவர்களுக்கு ஏமாற்றமே காத்திருக்கிறது. இது குறித்து அய்யர்மலை கோவில் செயல் அலுவலர் அனிதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:இலவச திருமண திட்டம் குறித்த முழு விவரத்தினை பொதுமக்களுக்கு தெரிவிக்க, பதாகை வைக்கப்பட்டுள்ளது. அய்யர்மலை கோவில் மூலம் இரண்டு ஜோடிகள் மட்டும் இலவச திருமண திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு செய்யப்படும் ஜோடிக்கு வரும் டிச., 4ம் தேதி, திருமணம் நடக்கவுள்ளது. பதாகையில் விடுபட்டுள்ள தவறுகள் சரி செய்யப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூடுதல் பயனாளிகள்...
2 ஜோடிக்கு மட்டுமே திருமணம் என்பதால், இலவச திருமண திட்டத்தில் பயன்பெறுவோம் என்ற நம்பிக்கையில் விண்ணப்பங்களை அளிப்பவர்களுக்கு ஏமாற்றம்தான் காத்திருக்கிறது. குளித்தலை கடம்பர் கோவிலிலும் 2 ஜோடிக்கு மட்டுமே இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது. ஏழை, எளிய மக்கள் ஏராளமானோர் இருக்கும் நிலையில், பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இத்திட்டமானது மக்களை ஏமாற்றும் கண் துடைப்பு செயலாகிவிடும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.