குளித்தலை: குளித்தலையை அடுத்த, தோகைமலை ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், மாற்றுத்திறன் மாணவர்களுடன் சக மாணவர்கள் இணக்கமாக பழகும் 'இணைவோம் மகிழ்வோம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாற்றுத்திறன் மாணவர்கள் உள்ளடங்கிய கல்வி திட்டம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கழுகூர் பஞ்., மாகாளிபட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பானுமதி தலைமை வகித்தார். துணை தலைமை ஆசிரியர் ரவிசெல்வன், ஆசிரியர் குமரவேல், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்.
இதில், 'இணைவோம் மகிழ்வோம்' என்ற தலைப்பில் மாற்றுத்திறன் மாணவர்களுடன் சமமாக பழகும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து காகித பறவைகள் செய்தல், கை அச்சினை வண்ணங்கள் பூசி பதித்தல், பட்டம் செய்தல், பிரமிடு செய்தல், பலுான் பறக்கவிடுதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.
மாற்றுத்திறன் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கவுரவப்படுத்துதல், மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோரை பாராட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.