கரூர்: கரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் காரணமாக அந்த துறை பணிகள் நேற்று முடங்கின.
ஊரக வளர்ச்சித் துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலம் கடந்த ஆய்வுகள், இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ் ஆப் காணொலி ஆய்வுகள் ஆகிய அனைத்தையும் முற்றாக கைவிட வேண்டும். பஞ்., செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். விடுபட்ட உரிமைகளான மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கணினி இயக்குனர்கள் அனைவருக்கும் 2017ல் வெளியிடப்பட்ட அரசாணையின் படி இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியம் வழங்கி அனைவரையும் பணி வரன்முறை செய்ய வேண்டும். பொதுமக்களின் நலன்களையும் நிர்வாக நலன்களையும் கருத்தில் கொண்டு பெரிய பஞ்.,களை பிரித்து, ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய ஒட்டுமொத்த சிறு விடுப்பு, இரண்டு நாள் போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
இதனால், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி திட்ட முகமை, 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் அலுவலக வேலைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள், ஊழியர்கள் பணியில் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.