கரூர்: சென்னையில், இரண்டு நாட்கள் நடக்கும் சர்வதேச ஜவுளி தொழில்நுட்ப மாநாடு நாளை தொடங்குகிறது.
இதுதொடர்பாக கரூர் ஜவுளி உற்பத்தியாளர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை ராதா ஹோட்டலில், நாளை, நாளை மறுநாள் (நவ.,25, 26), இந்திய தொழில் கூட்டமைப்பு, கரூர் ஜவுளி உற்பத்தியாளர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தமிழக ஜவுளித் துறை சார்ந்த அமைப்புகள் ஒன்றிணைந்து சர்வதேச ஜவுளி தொழில்நுட்ப மாநாட்டை நடத்துகின்றன. தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின், பல்வேறு துறை அமைச்சர்கள், தமிழக அரசின் முதன்மை செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் ஜவுளி தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு, பயிற்சி வகுப்பு மற்றும் இந்த தொழிலில் உள்ள வாய்ப்புகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம், கருத்தரங்கங்கள் நடக்கின்றன.
மாநாட்டில் அகில இந்திய அளவில் ஜவுளி தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், வெளிநாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள், ஜவுளி தொழில்நுட்ப பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து வாங்கும் வாடிக்கையாளர்கள், ஜவுளித் துறை சார்ந்த தொழிலதிபர்கள், இத்தொழில் தொடங்க ஆர்வமாக இருக்கும் தொழில் முனைவோர் உட்பட, 500 பேர் பங்கேற்கின்றனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.