நாமக்கல்: வி.ஏ.ஓ.,க்களுக்கான, 42 நாள் கிராம நிர்வாக பயிற்சி முகாம், நேற்று தேர்வுடன் நிறைவு பெற்றது.
தமிழகத்தில் உள்ள, வி.ஏ.ஓ.,க்களுக்கு, நில அளவை மற்றும் கிராம நிர்வாக பயிற்சி அளிக்க, வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். அதையடுத்து, மாநிலம் முழுவதும், 42 நாள் பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் உள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கு, பயிற்சி அளிக்கப்படுகிறது. நில அளவை பயிற்சி ஏற்கனவே முடிந்ததையடுத்து, கிராம நிர்வாக பயிற்சி அளிக்கப்பட்டது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், கலால் பிரிவு உதவி ஆணையர் பிரிவு கண்காணிப்பாளர் மகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கண்காணிப்பாளர்
சந்திரா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
மேலும், ஊரக வளர்ச்சி, பொது சுகாதாரம், கால்நடை பராமரிப்பு, வேளாண், மருத்துவம், போலீஸ், வனம், புள்ளியல், பொதுப்பணி, நெடுஞ்சாலை, கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களும் பயிற்சியளித்தனர். பயிற்சியில், கிராம பதிவேடுகளை பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அதன் நிறைவு நாள் நேற்று நடந்தது.
அதில், பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. ஆர்.டி.ஓ., மஞ்சுளா பார்வையிட்டார். தாசில்தார் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.