நாமக்கல்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டு நாட்கள் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர், நேற்று, நாமக்கல் மாவட்டத்தில், சிறுவிடுப்பு எடுத்து பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் நிர்வாக நலன்கருதி, பெரிய ஒன்றியங்களை பிரித்து, அதிகபட்சமாக, 25 ஊராட்சிகளை உள்ளடக்கிய ஒன்றியங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
'நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம் 675 பணியாளர்களில், 209 பேர் மட்டும் சிறுவிடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். 425 பேர் பணிக்கு வந்து விட்டனர். அதனால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை', என அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றும் போராட்டம் நடக்கிறது என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.