சேலம்: சேலத்தில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரில், அங்கீகாரம் பெறாத வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர், வாகன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வடக்கு சரக துணை கமிஷனர் மாடசாமி, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:சாலை விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத்தொகை அதிகரிப்பு திட்டம் படிப்படியாக சேலத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த விழிப்புணர்வை வாகன ஓட்டிகள் இடையே ஏற்படுத்த, நவ., 23(நேற்று) முதல், 3 நாளுக்கு, சேலத்தில், 16 இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.
அதிக அளவில் விபத்து நடக்கும் இடங்களாக கண்டறியப்பட்ட, 75 இடங்களில் சட்டம் ஒழுங்கு போலீசாருடன், போக்குவரத்து பிரிவு போலீசார் இணைந்து சோதனை நடத்தி அபராதம் விதிப்பு, வாகனங்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதிவேகம், அஜாக்கிரதையாக, பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும்படி வாகனம் ஓட்டுவோரை கண்டறிய, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சட்ட கல்லுாரி மாணவர் ஒருவர் மது போதையில் அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டிச்சென்று விபத்தில் சிக்கி பலியானார். அதனால், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரில், அங்கீகாரம் பெறாத வயதுக்கு குறைவானவர்களை, வாகனம் ஓட்ட பெற்றோர், அதன் உரிமையாளர்கள் அனுமதிக்க கூடாது. மீறி அனுமதித்தால், பெற்றோர், வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிந்து வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
சேலத்தில் நடப்பாண்டு இதுவரை, சாலை விதி மீறியதாக, 6 லட்சத்து, 44 ஆயிரத்து, 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அபராதமாக, ஜூனில், 21 லட்சம் ரூபாய், ஜூலை, ஆகஸ்டில் தலா, 13 லட்சம், செப்டம்பரில், 12 லட்சம், அக்டோபரில், 10 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், நடப்பு மாதத்தில் இதுவரை, 21 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
அபராதம் விதிப்பது நோக்கம் அல்ல. அனைத்து வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். அதன்மூலம் விபத்து, உயிரிழப்பை குறைப்பது தான் போலீசின் நோக்கம். மக்கள், போலீசாரின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.