ஆத்துார்: வசிஷ்ட நதியில் முதல்முறையாக, புஷ்கரணி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் மாவட்டம் ஆத்துாரில் அகில பாரதிய சந்த் சமிதி மாநில தலைவர் யுகதர்மகுரு கருடானந்த மகராஜி சுவாமிகள், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
சேலம் மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள கரியகோவில், புழுதிக்குட்டை அணையில் இருந்து வரும் சிற்றாறுகள் ஒன்றாக சேரும் இடம், வசிஷ்ட நதியாக செல்கிறது. பல நுாறு ஆண்டுக்கு முன், வசிஷ்ட முனிவர் தவம் செய்ததால், அவரது பெயரில் இந்த நதி உள்ளது. வசிஷ்ட நதி கரையோரம், வசிஷ்ட முனிவர் பிரதிஷ்டை செய்த பஞ்ச பூத ஸ்தல சிவன் கோவில் என, மொத்தம், 21 சிவலாயங்கள் உள்ளன.
தவிர, ஆத்துார் கோட்டை உள்பட பல்வேறு வரலாற்று சிறப்பு கொண்ட கல்வெட்டு, நடுகல் உள்ளிட்டவைகள் உள்ளன. வசிஷ்ட நதியில் முதல் முறையாக, புஷ்கரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக பெத்தநாயக்கன்பாளையம், ஆத்துார், தலைவாசல் உள்ளிட்ட இடங்களில் வசிஷ்டரை வழிபட்டு, விழா நடத்த திட்டமிட்டு, அதற்கான பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.