ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா, நைனாக்காடு பங்களா தோட்டத்தை சேர்ந்தவர் அனுஸ்ரீ, 26. பி.பி.ஏ., பட்டதாரி. திருச்செங்கோட்டை சேர்ந்த ரிக் வண்டி தொழிலாளி கவுதம், 28. இவர்களுக்கு, 3 ஆண்டுக்கு முன் திருமணமானது. குழந்தை கிடையாது. கருத்து வேறுபாடால், கணவரை பிரிந்து பெற்றோருடன் அனுஸ்ரீ தங்கியிருந்தார். நேற்று விஷம் குடித்து அனுஸ்ரீ உயிரிழந்தார். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். மேட்டூர் ஆர்.டி.ஓ., தணிகாசலம் விசாரிக்க உள்ளார்.
கல்லுாரி மாணவியர் மாயம்
சேலம்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சின்னமணலியை சேர்ந்த செந்தில்குமார் மகள் ஸ்ரீமதி, 19. சேலத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, பி.ஏ., படிக்கிறார். கடந்த, 21ல், சாரதா கல்லுாரி சாலையில் உள்ள கல்லுாரிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து செந்தில்குமார் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அழகாபுரம் போலீசார் தேடுகின்றனர். அதேபோல் சேலம், தாதகாப்பட்டி, குள்ளப்பன் தெருவை சேர்ந்த மைதிலி, 18, நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.பி.ஏ., படிக்கிறார். நேற்று முன்தினம் அவர் மாயமானார். அவரது தந்தை சரவணன் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் தேடுகின்றனர்.
பெண்ணிடம் 4 பவுன் அபேஸ்
சேலம்: சீரங்கபாளையத்தை சேர்ந்த, சத்திய சரவணன் மனைவி சந்தியா, 45. இவர் கடந்த, 8ல் சேலம், பில்லுக்கடை பஸ் ஸ்டாப்பில் இருந்து ஆட்டோவில் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வந்தார். பின் பஸ் ஏறியபோது அவர் கையில் இருந்த பையை காணவில்லை. அதில், 4 பவுன் தங்க சங்கிலி, 2,000 ரூபாய், ஏ.டி.எம்., கார்டு இருந்தன. இதுகுறித்து அவர் புகார்படி, டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
பைக் திருடியவருக்கு 'காப்பு'
சேலம்: கிச்சிப்பாளையத்தில், இருசக்கர வாகனங்களை ஒரு கும்பல் திருடி வந்தது. அந்த கும்பலை கைது செய்ய உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணையில், அம்மாபேட்டை, பலப்பட்டறை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த தர்மன், 23, திருடியது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 'பல்சர்' பைக், டி.வி.எஸ்., எக்ஸல் சூப்பர் மொபட்டை பறிமுதல் செய்தனர்.
மொபைல் திருடனுக்கு 'கவனிப்பு'
சேலம்: சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 3ம் தளத்தில், நேற்று காலை, 5:45 மணிக்கு நோயாளிகள் துாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவர், மொபைல் போனை அபேஸ் செய்து விட்டு வெளியே செல்ல முயன்றார். இதை கவனித்த நோயாளிகளில் உறவினர்கள், திருடனை பிடித்து, 'கவனிப்பு' செய்து அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், வாழப்பாடி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவராஜ், 58, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், வேறு எங்கு திருடியுள்ளார் என விசாரிக்கின்றனர்.
நகை திருடிய பெண் சிக்கினார்
வாழப்பாடி: வாழப்பாடியில் உள்ள நகை கடைக்கு, கடந்த ஜூன், 3ல் வந்த ஒரு பெண், 3 பவுன் தங்க சங்கிலியை திருடிச்சென்றார். கடை உரிமையாளர் புகார்படி, வாழப்பாடி போலீசார், 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சியை வைத்து, அந்த பெண்ணை தேடினர். விசாரணையில், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அருகே சாம்பல்பட்டியை சேர்ந்த சூரியகுமார் மனைவி அலமேலு, 42, என்பது தெரிந்தது. அவரை நேற்று கைது செய்த போலீசார், சங்கிலியை மீட்டனர்.
பெண் பலி: சந்தேக மரண வழக்கு
வாழப்பாடி: வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தை சேர்ந்த தமிழேந்திரன் மனைவி நளினி, 47. இவர் கடந்த, 18 மாலை, 'பம்ப் ஸ்டவ்'வில் டீ வைத்துக்கொண்டிருந்தார். அப்போது, அவர் மீது தீப்பற்றி படுகாயம் அடைந்தார். அவரை, குடும்பத்தினர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று அவர் உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் சந்தேக மரண வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இவருக்கு, மகன் விஷ்ணு உள்ளார்.
மருத்துவரின் 'ஸ்கூட்டி' அபேஸ்
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக சரஸ்வதி, 40, என்பவர் பணிபுரிகிறார். இவர் நேற்று மருத்துவமனை வளாகத்தில், 'அம்மா' ஓட்டல் அருகே, 'ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு பணிக்கு சென்றார். பணி முடிந்து வந்தபோது, 'ஸ்கூட்டி'யை காணவில்லை. இதுகுறித்து அவர் புகார்படி, மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவியை திருமணம் செய்தவர் கைது
சேலம்: அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த, கூலித்தொழிலாளி ஜீவா, 28. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அவரது மனைவி, மீண்டும் கர்ப்பிணியாக உள்ளார். ஆனால் கடந்த செப்டம்பரில், அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவியை, ஜீவா திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகார்படி, டவுன் மகளிர் போலீசார் விசாரித்து, நேற்று ஜீவாவை கைது செய்தனர்.