50 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு
வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, அத்தனுார் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ், 60; விவசாயி. இவர், ஐந்துக்கும் மேற்பட்ட பசு மாடுகள் வளர்த்து வருகிறார். அதில், ஒரு பசு மாடு அங்குள்ள தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது, 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர், பலகார ராமசாமி தலைமையிலான தீயணைப்பு துறையினர், பசுமாட்டை உயிருடன் மீட்டனர். துரிதமாக செயல்பட்டு பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை, அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
குமாரபாளையம்: கால்நடை வளர்ப்பில், கிராமப்புற விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நோய்களுக்கு ஆட்பட்டு கால்நடைகள் பாதிக்கும்போது, விவசாயிகள் நஷ்டமடைய நேரிடுகிறது. தற்போது, வீ.மேட்டூர், மேட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகளுக்கு அம்மை நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தடுப்பூசி முகாம் அமைத்து, நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, நேற்று கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.
சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல் பேட்டரி வண்டி வழங்கும் விழா
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல், 18 வார்டுகள் உள்ளன. அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை தனித்தனியாக பிரித்து வாங்க துப்புரவு பணியாளர்களுக்கு, 'கலைஞரின்' நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 18.27 லட்சம் ரூபாய் மதிப்பில் பேட்டரி வண்டி வழங்கும் விழா நடந்தது.
விழாவுக்கு அட்மா குழு தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார்,
எம்.எல்.ஏ., பொன்னுசாமி ஆகியோர் பங்கேற்று, 18.27 லட்சம் மதிப்பில், 12 பேட்டரி வண்டிகளை வழங்கினர். பஞ்., தலைவர் சித்ரா, துணை தலைவர் ரகு, அட்மா குழு துணை தலைவர் தனபாலன், செயல் அலுவலர் தனுஷ்கோடி, வார்டு கவுன்சிலர்கள் விஜயன், சக்திவேல், ஜெயச்சந்திரன், ராமச்சந்திரன், துத்திகுளம் பஞ்., தலைவர் குணசேகரன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
தீ விபத்தில் மூதாட்டி பலி
வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, அலவாய்பட்டி நாடார் தெருவை சேர்ந்த தங்கவேல் மனைவி பழனியம்மாள், 74; இவருக்கு, 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில், 3 பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. கடைசி மகனுடன் பழனியம்மாள் வசித்து வந்தார்.
கடந்த அக்., 27ல், வீட்டில் பழனியம்மாள் சமைத்துக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்தது. காயமடைந்த பழனியம்மாள், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இறந்தார். வெண்ணந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
குற்றவாளிகளை பிடித்த போலீசாருக்கு பாராட்டு
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே வெடியசரம்பாளையம் பாலிக்காட்டை சேர்ந்த நுாற்பாலை அதிபர் மணி, 70, என்பவரது வீட்டில் கடந்த, 8ல், காரில் வந்த மர்ம கும்பல், 28 லட்சம் ரூபாய், 18 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது. 4 தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளையடித்த, 19 குற்றவாளிகளை போலீசார் பிடித்தனர். குற்றவாளிகளை விரைவாக பிடித்த தனிப்படை போலீசாருக்கு, மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே, குட்டைமுக்கு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின், 17 வயது மகள்; இவர், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்து துப்பட்டாவால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாயில் மாணவி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.