திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள, ஆயிரங்கால் மண்டபத்தை சுற்றி பார்க்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால், பக்தர்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், 27 ஏக்கர் பரப்பளவுடன், ஒன்பது கோபுரங்கள், 63 சன்னிதிகள் மற்றும் ஆயிரங்கால் மண்டபம், புரவி மண்டபம், திருக்கல்யாண மண்டபம், தீப தரிசன மண்டபம் உள்ளிட்ட பல மண்டபங்கள் உள்ளன.
இதில், ஐந்தாம் பிரகாரத்தில், கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த மண்டபத்தில், ஆருத்ரா தரிசன விழாவின்போது, சிவகாமி சமேத நடராஜருக்கு திருமஞ்சனம் நடத்தப்படும். அந்த நாளில் மட்டும் பக்தர்களுக்கு இதுவரை அனுமதிக்கப்பட்டு வந்தது.
தற்போது, அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், ஆயிரங்கால் மண்டபத்தை பக்தர்கள் பார்வையிட அனுமதிக்க, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி நேற்று முன்தினம் இதை கலெக்டர் முருகேஷ் மற்றும் தமிழக துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தனர்.
மேலும் இங்கு, கோவில் வரலாறு, அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி மற்றும், 108 சிவ தாண்டவ ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.
தீப திருவிழா துவங்கியுள்ளதால், ஆயிரங்கால் மண்டபம் முழுதும், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.