வேலுார்:''கரூர் மேம்பால பணி முடியும் முன்பே, ஒப்பந்ததாரருக்கு தொகை முழுதும் வழங்கிய அதிகாரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்,'' என, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு கூறினார்.
வேலுார் மாவட்டம், அப்துல்லாபுரம் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் நடந்து வரும், புதிய பயிற்சி கூட கட்டுமான பணியை, அமைச்சர் வேலு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
அமைச்சர் வேலு கூறியதாவது:
தமிழகத்திலுள்ள, 69 ஐ.டி.ஐ.,க்களை மேம்படுத்த, 264 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணி நடக்கிறது. முதல்வர் ஒதுக்கிய, 2,200 கோடி ரூபாயில் மாநிலம் முழுதும், கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்.
ஏற்கனவே, 5,200 கோடி ரூபாய் செலவில், நகர்புற சாலைகள் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. கரூர் மேம்பால பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.
கரூர் மேம்பால பணி முடியும் முன்பே, அதற்கான தொகை முழுதும் ஒப்பந்ததாரரிடம் அளிக்கப்பட்டுள்ளது. பணத்தை வழங்கிய அதிகாரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். இது குறித்து, தலைமை பொறியாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு, தி.மு.க., - எம்.எல்.ஏ., நந்தகுமார் உடனிருந்தனர்.