நாகர்கோவில்: ''வன்முறையும், பயங்கரவாதமும் ஒரு போதும் வெற்றி பெறாது. நாட்டை பிளவுபடுத்தும் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்,'' என, தமிழககவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
வைணவத்துறவி ராமானுஜரின் சிலையை, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில், இன்று பிரதமர் மோடி காணொலியில் திறக்கிறார்.
இதற்கான விழா, கர்நாடக மாநிலம், திருநாராயணபுரம் யதுகிரி யதிராஜ மடம், 41-வது பட்டம் யதுகிரி யதிராஜ நாராயண ராமானுஜ ஜீயர் தலைமையில் துவங்கியது.
கேந்திரா தலைவர் பாலகிருஷ்ணன், அ.தி.மு.க., கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
கன்னியாகுமரி ஒரு புண்ணிய பூமி. ராமானுஜர் இங்கே வந்திருக்கிறார். சுவாமி விவேகானந்தர் இந்த பூமியில் தான் தேசிய உணர்வு பெற்றார்.
அவர் தேசத்தின் மறு சீரமைப்பை இங்கு துவங்கினார். இங்கிருந்து புறப்பட்டு சென்று, அமெரிக்காவின் சிகாகோவில் அவர் சனாதன தர்மத்தின் கருத்துகளை பரப்பினார். ராமானுஜரும், விவேகானந்தரும்மிகப்பெரிய ஆன்மிக தொண்டாற்றியுள்ளனர்.
ராமானுஜர் மக்களிடம் நம்பிக்கையை வளர்த்தார்; பாதுகாவலராக திகழ்ந்தார். இப்போது நாம் சமூக நீதி குறித்து பேசுகிறோம். ஆனால், 1,000ஆண்டுகளுக்கு முன் ராமானுஜர் சமூக நீதியை வார்த்தெடுத்து இருக்கிறார்.
இந்தியாவின் கலாசாரமும், பாரம்பரியமும் சில சக்திகளால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. அதற்கு அறிவார்ந்த சமூகம் என அழைக்கப்படும் சில சக்திகள் உதவின.
அவர்களில் ஒருவர் கார்ல் மார்க்ஸ். தற்போது நாடு நம்பிக்கையுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் நாடாக இருக்கிறோம். உலகளாவிய பிரச்னைகள் தீர்வுக்காக பாரதத்தை உலக நாடுகள் எதிர்நோக்கி உள்ளன.
கொரோனா போன்ற ஆபத்தான காலங்களில் பல ஏழை நாடுகளுக்கு நாம் மருந்துகளை அனுப்பியுள்ளோம். உலக தட்பவெப்பநிலை பிரச்னையை தீர்ப்பதில் பாரதம் முன்னோடியாக இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனின் செயல் திறமையை இந்த தேசம் நம்புகிறது.
இளைஞர்கள், இளம் பெண்கள் அளப்பரிய சாதனைகளை செய்து வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் வரை, 500 ஸ்டார்ட் அப் கம்பெனிகள் இருந்த நாட்டில் தற்போது, 80 ஆயிரம் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் உருவாகியுள்ளன. நம் பள்ளி மாணவர்கள் விண்ணில் ராக்கெட் விடும் தொழில்நுட்பத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
வன்முறையும், தீவிரவாதமும் ஒரு போதும் வெற்றி பெறாது. நாட்டை பிளவுபடுத்தும் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும். இந்த தேசத்தை ஒரே குடும்பமாக்கும் முயற்சியில் தான் ராமானுஜர் ஈடுபட்டிருந்தார். அவரது போதனைகளை பின்பற்ற வேண்டும.
இவ்வாறு அவர் பேசினார்.