திருப்பத்துார்:ஆம்பூர் அருகே, அரசு செவிலியர் வேலை வாங்கி தருவதாக கூறி, 13 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே தேவலாபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 33; எலக்ட்ரீஷியன். இவர் மனைவி ஹேமலதா, 25. இவர் நர்சிங் படித்து விட்டு ஆம்பூரில் உள்ள ஒரு தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
வாணியம்பாடி அருகே சம்மந்திக்குப்பத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், 50, அருண்குமார், 55, அவரது நண்பர்கள் ஜாபராபாத் பாஷா, 45, ரபீக் அகமத், 40, சைலாபுதீன், 35, ரபீக், 30, ஆகியோர் ரமேசை அணுகினர்.
'சென்னை தலைமை செயலகத்தில் நிறைய அதிகாரிகளை தெரியும்; அவர்களிடம் சொல்லி உங்கள் மனைவிக்கு அரசு மருத்துவமனையில், செவிலியர் வேலை வாங்கித் தருகிறோம். அதற்கு, 13 லட்சம் ரூபாய் செலவாகும்' எனக் கூறினர்.
அதை உண்மை என நம்பி கடந்தாண்டு அவர்களிடம், 13 லட்சம் ரூபாயை ரமேஷ் கொடுத்துள்ளார்.
செப்டம்பர் 2ம் தேதி பணியில் சேருமாறு, போலி அரசு உத்தரவை ஹேமலதாவிடம் கொடுத்தனர்.
அதை திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் அந்த பெண் கொடுத்த போது போலியானது என தெரிந்தது.
இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ரமேஷ் மற்றும் ஹேமலதா புகார் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், சிவக்குமார் உட்பட ஆறு பேரும் சேர்ந்து போலியான அரசு உத்தரவை தயாரித்து வழங்கியது தெரிந்தது.
இதையடுத்து சிவக்குமார் உள்ளிட்ட ஆறு பேரை நேற்று கைது செய்த போலீசார், வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.