கோவை:கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் தங்கி படித்த மாணவன், சக மாணவர்களால், பாலியல் தொந்தரவுக்கு ஆளானதோடு, பெற்றோர் புகார் தெரிவித்தும், பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என, பாடகி சின்மயி 'டுவிட்' செய்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடகி சின்மயி நேற்று தனது, டுவிட்டர் பக்கத்தில், கோவையை சேர்ந்த தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்த, மாணவரின் பெற்றோர், பகிர்ந்த தகவலை குறிப்பிட்டு, 'டுவிட்' செய்திருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில், விடுதியில் தங்கிய தன் மகன், சக மாணவர்களால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தபோது, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மாற்று சான்றிதழ் பெற்று வெளியேறியதோடு, மகனுக்கு கவுன்சிலிங் அளித்து வருகிறோம்.
பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்கும், பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாகவும், பெற்றோர் விழிப்புடன் இருக்குமாறும், டுவிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பதிவில், பள்ளியின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
விசாரணை
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதியிடம் கேட்டபோது,''சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள, பெற்றோரின் புகார் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. விடுதிகளுடன் இயங்கும் தனியார் பள்ளியில், இக்கல்வியாண்டில் இடையிலே மாற்றுச்சான்றிதழ் பெற்று சென்ற மாணவர்களின் விபரங்கள் குறித்து விசாரித்து வருகிறோம். பெற்றோர் இதுபோன்ற புகார்களை தெரியப்படுத்தினால் தான், விசாரித்து உண்மையாக இருக்கும்பட்சத்தில், உரிய பள்ளி நிர்வாகம் மீது, நடவடிக்கை எடுக்க முடியும்,'' என்றார்.
புகார் அவசியம்
மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மல்லிகை செல்வராஜ் கூறுகையில்,'' பாதிக்கப்பட்ட குழந்தைக்கு, உடனடியாக சிகிச்சை அளித்து, கவுன்சிலிங் அளிப்பது எவ்வளவு முக்கியமோ அதைபோல, புகார் அளிப்பதும் அவசியம்.
இதுபோன்ற புகார்கள், ரகசியம் காக்கப்படும். பெற்றோர் சமூக வலைதளங்களில், பகிர முன்வரும்போது, புகார் அளிக்க தயங்க கூடாது. சைல்டு லைன் எண்ணுக்கோ, போலீஸ் ஸ்டேஷனிலோ புகார் அளிக்கலாம்,'' என்றார்.