திருத்தணி:திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகை சுற்று வட்டாரங்களில், சம்பா பருவ நெல் பயிரிட, விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
இதற்காக, இப்பகுதியில் இயங்கி வரும் வேளாண் விரிவாக்க மையத்தில் விற்கப்படும் விதைநெல்லை வாங்கிச் சென்றனர்.
இதில் குண்டுநெல் விதைகள் அதிகளவில் விவசாயிகள் வாங்கியதால், மூன்றே நாட்களில் குண்டுநெல் விதைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
இது குறித்து, நம் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து திருத்தணி வேளாண் துறை அதிகாரிகள், செங்கல்பட்டு மாவட்டம் சூரணம்பேடு வேளாண் விரிவாக்க மையத்தில் இருந்து, குண்டு விதைநெல் எடுத்து வந்து, விவசாயிகளுக்கு, நேற்று முதல் வினியோகம் செய்து வருகின்றனர்.
திருத்தணி வேளாண் உதவி இயக்குனர் சம்பத் கூறுகையில், ''குண்டு விதை நெல், 3,000 கிலோ எடுத்து வந்து, விவசாயிகளுக்கு, மானிய விலையில் வழங்கி வருகிறோம். தவிர, 'கோ- - 51' ரக விதை நெல், 11 ஆயிரத்து 900 கிலோ வரவழைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. வரும் நாட்களில், விதை நெல்லுக்கு தட்டுப்பாடு இருக்காது,'' என்றார்.