சென்னை:சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 150 பேருந்துகளில், அடுத்த பேருந்து நிறுத்தம் பற்றிய அறிவிப்பை ஒலிபெருக்கி வாயிலாக தெரிவிக்கும் வசதி, இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகளில், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இதனால், பயணியர் நிற்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, அருகில் வரும் பேருந்துகள் குறித்த தகவல்களை, 'சென்னை பஸ்' செயலி வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது.
இதே ஜி.பி.எஸ்., வசதியைப் பயன்படுத்தி, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் உள்ளது போல், மாநகர பேருந்துகளிலும், அடுத்த பேருந்து நிறுத்தம் குறித்து ஒலி பெருக்கியின் வாயிலாக அறிவிக்க, 2019ல் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கொரோனா பரவல் இருந்ததால், அது செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது, இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. முதல்கட்டமாக, 150 மாநகர பேருந்துகளில், இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியால், பேருந்து நிறுத்தத்துக்கு 200 முதல் 300 மீட்டருக்கு முன், அடுத்த பேருந்து நிறுத்தம் பற்றி ஒலி பெருக்கியில் அறிவிப்பு வரும்.
மேலும், முக்கிய இடங்கள் குறித்த குறிப்புகளும் இடம்பெறும். இடைப்பட்ட நேரத்தில், தனியார் விளம்பரங்கள் ஒலிக்கும்.
இது, பயணியர் தங்களது நிறுத்தத்தில் இறங்க, தயாராக இருக்க உதவும். இந்த அறிவிப்பு தமிழிலும் ஆங்கிலத்திலும் இடம்பெறும்.
இதற்காக பேருந்தின் முன், பின், நடுப்பகுதிகளில் பக்கவாட்டுக்கு ஒன்று என, மொத்தம் ஆறு ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஒலி பெருக்கி பேருந்துகளை, இன்று காலை சென்னை பல்லவன் இல்லத்திலுள்ள மத்திய பணிமனையில் இருந்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைக்க உள்ளார்.