விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி அருகே தேர்தல் முன் விரோதம் காரணமாக பா.ம.க., நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூரைச் சேர்ந்தவர் ஆதித்யன், 45; பா.ம.க., மாவட்ட துணைச் செயலாளர். இவரது உறவினர் லட்சுமி நாராயணன். இருவருக்குமிடையே தேர்தல் முன் விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் ஆதித்யன் பைக்கில் பனையபுரத்திலிருந்து கப்பியாம்பூலியூர் சென்றார்.
மண்டபம் பெட்ரோல் பங்க், வாதானுாரான் வாய்க்கால் அருகே, மர்ம நபர்கள் வழிமறித்து கத்தியால் வெட்டினர். இதில் ஆதித்யன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் ஆதித்யன் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
எஸ்.பி., ஸ்ரீநாதா, டி.எஸ்.பி., பார்த்திபன் ஆகியோர் ஆதித்யன் மனைவி சாந்தியிடம் விசாரணை நடத்தினர்.
சாந்தி அளித்த புகாரின் பேரில் உறவினர்களான கப்பியாம்புலியூரைச் சேர்ந்த லட்சுமி நாராயணன், ராமு, விஷ்ணு, நாராயணமூர்த்தி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 2:00 மணிக்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு ஆதித்யன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பதற்றம் காரணமாக கப்பியாம்புலியூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.