சிதம்பரம்-மழையை எதிர்பார்த்து காத்திருந்த அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியதால், வீராணம் ஏரியின் கொள்ளளவை மீண்டும் அதிகரிக்கும் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே, மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியான வீராணம் அமைந்துள்ளது.
விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கி வரும் இந்த ஏரியில் இருந்து 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது. மேலும், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காகவும் வீராணத்தில் இருந்து தண்ணீர் அனுப்பப்படுகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன் பெய்த கன மழை காரணமாக, வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால், ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் ஓடை மற்றும் வெள்ளாற்றில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து, வானிலை ஆய்வு மையத்தின் கன மழை எச்சரிக்கை காரணமாக, ஏரியில் இருந்த தண்ணீர் பாதியளவுக்கு வெளியேற்றப்பட்டு இருப்பு குறைக்கப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, ஏரியின் மொத்த கொள்ளவான 1,465 மில்லியன் கன அடியில், தண்ணீரின் இருப்பு 600 மில்லியன் கன அடியாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், வங்கக் கடலில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்களும் புயலாக மாறாமல் வலுவிழந்ததால் எதிர்பார்த்த மழை இல்லாமல் போனது. இதனால், வீராணம் ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றிய அதிகாரிகள் திகைத்து நின்றுள்ளனர்.
கடந்த 5 நாட்களாக வெயில் அடித்து வருவதால், வீராணத்தின் நீர் மட்டத்தை மீண்டும் உயர்த்த முடிவு செய்து, கீழணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை வீராணம் ஏரிக்கு அனுப்பும் பணியை கடந்த 20ம் தேதி துவங்கினர். முதல்கட்டமாக, 317 கன அடி தண்ணீர் அனுப்பி வந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, 1500 கன அடி தண்ணீர் வடவாறு மூலம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
இதன் காரணமாக, ஏரியின் நீர் மட்டம் மீண்டும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த மாதம் 10ம் தேதிக்குள் வீராணம் ஏரி முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏரியில் 800 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.
ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து இருப்பதால், சென்னைக்கும், பாசனத்திற்காகவும் 440 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதில், சென்னைக்கு 65 கன அடியும், பாசனத்திற்கு 375 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.