வானுார்-வானுார் அருகே பள்ளி மாணவருக்கு மிரட்டல் விடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 50க்கும் மேற்பட்டோர் கிளியனுார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்புநிலவியது.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த ஒழிந்தியாம்பட்டு கிராமத்தில் அனைத்து வீடுகளுக்கும் மத்திய அரசு நிதி மூலம் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக 3.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 752 மீட்டர் பைப் லைன் மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடந்தது.
ஆனால், ஒரு சில வீடுகளுக்கு மட்டும் குடிநீர் குழாய் அமைத்து விட்டு மற்ற வீடுகளுக்கு இணைப்பு வழங்காமலும், தெருக்களில் பைப் லைன் போடாமல் டம்மி பைப் வைத்துள்ளனர்.
இந்த முறைகேடு குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவர், வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட துறையைச் சேர்ந்த மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, பணிகளில் குறை இருப்பதைக் கண்டறிந்தனர்.
இந்நிலையில் வானுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து சில அதிகாரிகள், சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட பள்ளி மாணவரை, அவர் படிக்கும் பள்ளிக்குச் சென்று மிரட்டியுள்ளனர்.
இதையெடுத்து, பள்ளி மாணவரின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு 7:00 மணிக்கு, பா.ம.க., மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில், கிளியனுார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
உண்மை நிலையை வெளியிட்ட பள்ளி மாணவரை மிரட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, புகார் அளித்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.