விழுப்புரம்,-வாலிபரிடம் 1.50 லட்சம் ரூபாயை ஏமாற்றியவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த மேல்புதுப்பட்டைச் சேர்ந்தவர் மோகன், 33; இவர், கடந்த 21ம் தேதி தனது மனைவியின் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தியுள்ளார்.
அப்போது, அதில் ஒரு தனியார் மொபைல் ஆப்பில், வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்ற விளம்பரம் லிங்க் வந்துள்ளது.
அந்த லிங்க் மூலம் உள்ளே சென்றபோது, ரீசார்ஜ் செய்து டாஸ்க் முடிப்பது குறித்து மர்ம நபர் கூறியுள்ளார். அதன்படி, 200 ரூபாய் செலுத்தி 345 ரூபாயை மோகன் எடுத்துள்ளார்.
தொடர்ந்து அவரது மனைவி நிவேதா வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட 'ஜிபே' மூலம் 91 ஆயிரத்து 700 ரூபாய், அவரது வங்கி கணக்கு 'ஜிபே' மூலம் 20 ஆயிரம் ரூபாய், இரண்டு கிரெடிட் கார்டில் இருந்து 38 ஆயிரத்து 900 ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அந்த லிங்கிற்கு அனுப்பியுள்ளார்.
பின், அந்த தொகையை தராமலும், மேலும் பணம் கட்டும்படி கூறி மர்ம நபர் ஏமாற்றியுள்ளார்.
இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.