பா.ஜ.,வின் சமீபத்திய சர்ச்சையோடு, எம்.ஜி.ஆரை ஒப்பிட்டு, தி.மு.க.,வின் தகவல் தொழில்நுட்ப அணியினர் செய்த பிரசாரம், சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தமிழக பா.ஜ.,வில் சூர்யா - டெய்சி இடையேயான மோதல், பல விமர்சனங்களை எழுப்பியது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இருவரும், 'அக்கா - தம்பி' என கூறி, பொது வெளியில் சமரசம் ஆகினர்.
இந்நிலையில், தி.மு.க.,வின் ஐ.டி., அணி சார்பில், சூர்யா - டெய்சி விவகாரத்தோடு, எம்.ஜி.ஆர்., நடித்த படக் காட்சிகளை ஒப்பிட்டு, சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர்.
எம்.ஜி.ஆர்., படங்களில், கனவு பாடல் காட்சிகளில், நடிகையருடன் காதல் செய்வார்; பின், தங்கச்சி - அண்ணா என, இருவரும் அழைத்துக் கொள்ளும் காட்சி வரும். அதேபோல், தமிழக பா.ஜ.,வில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக, தி.மு.க.,வினர் விமர்சித்துள்ளனர்.
இதற்கு, எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக பா.ஜ., நிர்வாகி வினோஜ் பி.செல்வம், 'எம்.ஜி.ஆரை இதை விட வேறு யாரும் அசிங்கப்படுத்த முடியாது. 'திராவிட மாடல்' வளர்ப்பின் மட்டரகமான ரசனை இது' என, கண்டித்துள்ளார்.
- நமது நிருபர் -