மதுரை மத்திய சிறையின்கீழ் உள்ள திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட சிறைகளில் அடையாள அணிவகுப்பு அறை திறப்பு விழா நேற்று நடந்தது. காணொலியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
குற்றவாளிகளை சாட்சிகள் மூலம் உறுதிபடுத்த சிறைகளில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. மதுரை, திருச்சி உட்பட 9 மத்திய சிறைகளில் அதற்கான அறைகள் உள்ளன. ஒரு பகுதியில் குற்றவாளியும், மற்றொரு பகுதியில் நீதிபதி, சாட்சிகளை அடையாளம் காணாத வகையில் ஒரு வழிக்கண்ணாடி தடுப்புடன்கூடியதாக அந்த அறை உள்ளது. உயர்நீதிமன்றம் உத்தரவுபடி இத்திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் 'போக்சோ' குழு இத்திட்டத்தை மாவட்ட சிறைகளிலும் அமல்படுத்த பரிந்துரைத்தது. இதை ஏற்று 12 சிறைகளில் நேற்று அடையாள அணிவகுப்பு அறை திறக்கப்பட்டது. துறை அமைச்சர் ரகுபதி, டி.ஜி.பி., அமரேஷ் பூஜாரி பங்கேற்றனர். விருதுநகர் சிறையில் டி.ஐ.ஜி., பழனியும், ராமநாதபுரம் சிறையில் கூடுதல் எஸ்.பி., வசந்தகண்ணனும் பங்கேற்றனர்.