மதுரை: மாற்றுத் திறனாளிகள் தமிழகத்திலுள்ள சுற்றுலாத் தலங்களை எளிதில் அணுகக்கூடிய வகையில் திட்டத்தை வகுத்து வழிகாட்டுதல்களை வெளியிட அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
மதுரை ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு: நான் மாற்றுத் திறனாளி. ஊன்றுகோலுடன் குற்றாலம் அருவியில் குளிக்கச் சென்றேன். கூட்ட நெரிசலில் குளிக்க முடியவில்லை. ஏமாற்றமடைந்தேன். மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு வழங்க சட்டம் வழிவகை செய்கிறது.
குற்றாலம் உட்பட தமிழகத்தில் அனைத்து சுற்றுலா மையங்களிலும் மாற்றுத் திறனாளிகள் இடையூறின்றி, எளிதில் சென்றுவர சாய்தள படிக்கட்டு, சக்கர நாற்காலிகள் உட்பட தகுந்த அடிப்படை வசதிகள் செய்ய தமிழக சுற்றுலாத்துறைக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராஜா குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது.தமிழக அரசு தரப்பு: மாற்றுத் திறனாளிகளை மற்றவர்களுக்கு இணையாக அரசு நடத்துகிறது. பாகுபாடு இல்லை. அவர்களுக்காக சென்னை மெரினா கடற்கரையில் நிரந்தரப் பாதை அமைக்கும் பணி சமீபத்தில் துவங்கியுள்ளது. இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் மெரினாவின் அழகை ரசிக்க முடியும். சட்டப்படி மாற்றுத் திறனாளிகள் மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை எளிதில் அணுகுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: மாற்றுத் திறனாளிகளுக்கு சம அந்தஸ்து வாய்ப்பை சட்டம் வழங்குகிறது. அவர்களின் உரிமைகளை முழுமையாக அனுபவிக்க அரசு, உள்ளாட்சி அமைப்புகள் வழிவகை செய்வது அவசியம். மாற்றுத் திறனாளிகளுக்காக கேரளாவில் 'தடை இல்லாத கேரளா சுற்றுலா' திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியை ஐ.நா.,வின் உலக சுற்றுலா அமைப்பு அங்கீகரித்துள்ளது.
மற்றவர்களைப் போலவே மாற்றுத் திறனாளிகளுக்கு பொழுது போக்கு மற்றும் கலாசார வாழ்வில் சமமான பங்கேற்புடன் கூடிய சுற்றுலா இன்றியமையாதது என இந்நீதிமன்றம் கருதுகிறது. இது மூத்த குடிமக்களுக்கும் பொருந்தும். மாற்றுத் திறனாளிகள் தமிழகத்திலுள்ள சுற்றுலாத் தலங்களை எளிதில் அணுகக்கூடிய வகையில் நிபுணர்களுடன் ஆலோசித்து ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும். தகுந்த வழி காட்டுதல்களை தயாரித்து வெளியிட வேண்டும் என இந்நீதி மன்றம் அரசுக்கு அறிவுறுத்துகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.