ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் நகைகள் எடை குறைவிற்கு அர்ச்சகர்களிடம் இழப்பீடு வசூலிக்கும் உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தங்கம், வெள்ளி நகைகளை அதிகாரிகள் குழு 2019 ல் சரிபார்த்தது. எடை குறைவு, சில நகைகள் இல்லாததற்கு காரணமாக இருந்ததாகக்கூறி சில அர்ச்சகர்கள், ஊழியர்களிடம் ரூ.7 லட்சத்து 49 ஆயிரத்து 964 இழப்பீடு வசூலிக்க கோயில் செயல் அலுவலர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து ராமேஸ்வரம் விஸ்வநாதன் (குருக்கள், ஓய்வு) உட்பட 34 பேர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர்கள் பொறுப்பில் நகைகள், அதற்குரிய பதிவேடுகள் பாதுகாப்பு அறையில் பாதுகாக்கப்படுவது வழக்கம். எடை குறைவிற்கு எங்களை பலிகடா ஆக்குவது ஏற்புடையதல்ல. சுவாமிக்கு பூஜை, அலங்காரம் செய்யும்போது நகைகளில் தேய்மானம் ஏற்படுவது இயற்கையே. நீண்ட இடைவெளிக்கு பின் நகைகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. தகுந்த காரணம் இன்றி எங்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு விளக்கம் அளிக்க போதிய வாய்ப்பளிக்கவில்லை. கோயில் செயல் அலுவலரின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
நீதிபதி முகமது சபீக்: கோயில் செயல் அலுவலரின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அவருக்கும், அறநிலையத்துறை கமிஷனர், இணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டார்.