மதுரை: இறந்தவர்களின் உடல்களை கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது. கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தை மதம் சார்ந்த நோக்கங்கள் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்செந்துார் நாராயணன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 30 ஏக்கர் நிலம் கீழ திருச்செந்துாரில் உள்ளது. இது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இறந்தவர்களின் உடல்களை அங்கு அடக்கம் செய்கின்றனர். அங்கு இரவில் சமூகவிரோதச் செயல்கள் நடக்கின்றன. இது புனிதத் தன்மை, வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயிலுக்கு சோதனை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
திருவிழா நாட்களில் அக்காலியிடத்தில் பக்தர்கள் தங்குவது வழக்கம். அறநிலையத்துறை கமிஷனர், துாத்துக்குடி கலெக்டருக்கு புகார் அனுப்பினோம். காலி இடத்தில் இறந்தவர்களை புதைக்க தடை விதிக்க வேண்டும். அந்நிலத்தை மீட்டு, திருவிழாக் காலங்களில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க, வாகனங்கள் நிறுத்த பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அந்த இடத்தை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர்கள் மயானமாக பயன்படுத்தாமல், அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு நாராயணன் மனு செய்தார்.
நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு: கோயில் நிலத்தை மூன்றாம் தரப்பினர் மயானமாக பயன்படுத்துவதை தடுக்க மற்றும் சுப்பிரமணியபுரம் மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கோயில் இணை கமிஷனர் கடிதம் அனுப்பியுள்ளார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை தெரிவித்துள்ளது. இதுவரை நடவடிக்கை இல்லை.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் பழமையானது. முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று. வைகாசி விசாகம், ஆவணித் திருவிழா, கந்த சஷ்டி விழா, மாசி திருவிழா, சூரசம்ஹாரம் உட்பட பல ஹிந்து பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. தரிசனத்திற்காக பக்தர்கள் அதிகம் வருகின்றனர். இச்சூழலில் கோயில் அருகே போதிய அடிப்படை வசதிகள் செய்யாவிடில் பக்தர்கள் சிரமப்படுவர். இறந்த உடல்களை கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது. கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தை மதம் சார்ந்த நோக்கங்கள் மற்றும் அத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கோயில்கள் மற்றும் அதன் சொத்துக்களின் பாதுகாவலராக அறநிலையத்துறை உள்ளது. கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க அனைத்து பயனுள்ள நடவடிக்கைகளையும் அறநிலையத்துறை எடுக்க வேண்டும். கோயில்கள், அறநிலையங்கள் முறையாக நிர்வகிக்கப்படுவது, அவற்றின் வருவாய் உரிய நோக்கங்களுக்காக முறையாக பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டிய கடமை, அதிகாரம் அறநிலையத்துறைக்கு உள்ளது. பிரச்னையின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு மனுவை தகுதி அடிப்படையில் அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். மயானத்திற்கு மாற்று இடம் ஒதுக்க துாத்துக்குடி கலெக்டர் பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.