குளித்தலை: அரசு வழங்கிய இலவச வீட்டு மனையில் நில அளவீடு செய்ய கோரியும், புதிய வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கிராம மக்கள் நேற்று மனு அளித்தனர்.
குளித்தலையை அடுத்த, பிள்ளப்பாளையம் பஞ்., கொம்பாடிபட்டி கிராமத்தில் ஆதிதிராவிட நலத்துறையினர் சார்பில் பட்டியல் இனத்தை சேர்ந்த 195 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது. ஆனால் மனை அளவீடு செய்யப்படாததால், அந்த இடத்தில் வீடு கட்ட முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து பலமுறை அரசிடம் மனு கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை, குளித்தலை தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துச்செல்வம் தலைமையில், வீட்டு மனை பட்டா பெற்ற பயனாளிகள் நில அளவீடு கோரியும், மேலும் பலர் புதிய வீட்டுமனை பட்டா கோரியும் தரையில் அமர்ந்து முழக்கமிட்டனர்.
அதை தொடர்ந்து, 300க்கும் மேற்பட்டோரின் மனுக்கள், ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளர் முரளிதரனிடம் வழங்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் திரண்டதால் குளித்தலை தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.